Sunday, October 25, 2009

நிழல்கள்…


சூரியனையும் பிடித்து போனது எனக்கு
உன்னோடு செல்கையில்
உன் நிழலோடு என் நிழல் சாயும்
ஸ்பரிசங்களுக்காக …

இளைப்பாறியே
களைத்து போகிறேன்.
ஒவ்வொரு முறையும்
உன் நிழலில்….

உச்சி வெய்யிலில் நடக்காதே,
என் மீது சாய மறுக்கிறது
உன் நிழல்….

புதுக்கவிதைகள்…


அடுத்த கவிதை என்ன எழுதலாம்
என சிந்தனையில் இருந்த போது
உன் புன்னகையில் பூத்திருந்தது
ஒரு சில புதுக்கவிதைகள் …

உனக்காக என் சிறு புன்னகை
மட்டுமே உதிர்கிறேன் என்றேன்…
உதிர்த்த புன்னகையை அள்ளி தருகிறேன்
உன்னிடமே என்று பதிக்கின்றாய்
உன் பார்வைகளால் ….

என்னிடம் இல்லை…


உன் பெயர் எழுதிய பேனாவை
மட்டும் நான் இரவல்
கொடுப்பது இல்லை …
உன் பெயர் எழுதாத பேனாக்கள்
என்னிடம் இல்லை …

உனக்காய் சில நினைவுகள்…


உனக்காய் வாங்கிய
பிறந்த நாள் பரிசு
என்னிடமே இருக்கட்டும்…
உன்னை தினம் தினம்
காட்டும் அழகழகாய்
என் கவிதைகளில் …


உனக்காக என்னில் சில மாற்றங்கள்
நிகழும் போது எல்லாம்
இந்த மண்ணில் புதுப்புது
பிறவி எடுக்கின்றேன் …

என்னை விட என் கனவுகளே
அதிகம் உன்னை காண்கிறது,
உன் விடுமுறை நாட்களிலும்…

காதல் வரிகள் சில …


ஒரு கவிதைக்காக எவ்வளவு நாள்
வேண்டுமானாலும் காத்திருக்கலாம்,
உன் விடுமுறை நாள் கழித்து
என்று வருவாய் ….

ஒருவனை காதலிப்பதாய் சொல்லி
என்னிடம் நீ பொய் உரைப்பதாய்
முதற்புள்ளி இட்டாய் உன் காதலுக்கு …
அது மேலும் இரு புள்ளி இட்டு
தொடருமிட்டது என் காதலுக்கு …

என் கவிதைகளுக்கு ….


கதை ( எண்ணம் )
திரைக்கதை ( எழுத்து )
வசனம்
இயக்கம்
பாடல்
இசை
சண்டைப்பயிற்சி
நடனம்

நீ மட்டுமே !!!…

நட்புக்காக
என் காதல்…

சிந்தனையில் சில …


தேவதையின் பெயரை கடவுச்சொல்லாக
பயன்படுத்தும் போது மட்டும்
பயனர் சொல் பயனடைகிறது …

நான் சாய்ந்து கொள்ள நினைத்த போது
முந்தானை முந்திக்கொண்டது,
உன் தோளில்…

உன் பார்வைகளைதான் பதிவிறக்கம்
செய்கிறேன்
இப்படி கவிதைகளாய் ….

உன் மெல்லினமும் என் வல்லினமும்


“எப்பவுமே கவிதைதான் எழுதுவீங்களா?,
புதிர் விடை ஏதாச்சும் எழுதுங்களேன்..!”
“என் காதலின் உயரம் ஐந்தரை அடி,
என் கவிதையின் எடை 54 கிலோ … அது என்ன?..”

“ஏன் காதல் கவிதை மட்டும் எழுதுறீங்க..?”
“தேவதைக்கு படிக்க விருப்பமானால்
என் மரண சாசனத்தையும் எழுதுகிறேன்…”


“ஏன் கவிதைகளில் கார்ட்டூன் படம்
வச்சிருக்கிங்க ?…”

“தேவதையை கவிதைக்குள் ஒழித்து
வைத்து விட்டு வெறும் பிம்பங்களை
மட்டும் காட்டுகிறேன்”…

” உங்க கவிதை எல்லாம் நல்லா இருக்கு!”
“ஆம் … தேவதை படித்த பின்பு மட்டும் ..!”

“யாரை பத்தி கவிதைகளில் இவ்ளோ எழுதுறீங்க..?”
“யாரந்த பெண் …?”
“மன்னிக்கவும் …. பெண்ணல்ல அது …!
பெண்ணுருவில் ஒரு மண்ணுலக தேவதை …!”


“சரி !!!… அந்த தேவதைதான் யாரு …?”
“வசந்த மாளிகை திரைப்படம் போல
ஏழு கண்ணாடி வைத்து காட்ட இயலாது,
என் கண்ணின் கருவிழியை மட்டும் பார் …
அதில் தெரியும் அந்த தேவதை ….!”


” ஏய் ….!!!.. அடி வாங்கப்போறீங்க ….”
“இன்னொரு முறை சொல்லேன்
அந்த ஹைக்கூ கவிதை வரிகளை ..!!!”

பொய்கள் …


ஒரு பொய்யை மறைக்க
ஓராயிரம் பொய் சொல்கிறேன்
உன்னிடம் …
நீயும் பொய்யுரைகின்றாய்
நம்புகிறேன் என்று,
என் பொய்களை எல்லாம் ரசித்துக்கொண்டே …

என் பொய்களை மட்டும் நீ
அதிகம் ரசிப்பதால் நான்
உண்மை பேசவே மறந்து போகிறேன் ….

உன் பொய்களை ரசிக்கவே
நான் தினமும் புதுப்புது பொய்களை
சொல்கிறேன்…
ஒன்று கூட பொய்க்கவில்லை
உன் பொய்யை விட ….

நீ நம்பிவிட்டதாய்
நினைத்த பொய்கள் அனைத்தும்
பொய் பேசுகின்றன என்னிடத்தில்,
நீ என் பொய்களை நம்புகிறாய் என்று …

நான் சொல்லி முடித்த இறுதியில்,
உன் சிறு புன்னகையில் தோற்றுபோகிறது
என் பொய்கள் அனைத்தும் …

ஒவ்வொரு பொய்க்கும் நான்
ஒரு புள்ளி இட்டு முடிக்க நினைக்கும் போது
நீ மேலும் இரு புள்ளிகளிடும் போது
உயிர்ப்பிக்கின்றது எனது அடுத்தப் பொய்கள் …

நீ திருத்தும் பணிகளில்
என் பொய்களையும் சேர்த்துக்கொண்டாய்
என நினைக்கிறேன்
“இந்த பொய்யை இப்படி பேசனும்னு” எனக்கு
நீ சொல்லி கொடுக்கும் போது …

என பின்னிரவுகள் அனைத்தும்
கரைந்து போகின்றன,
நாளை உன்னிடம் பேச வேண்டிய
பொய்களை யோசித்து….

தொடர்ந்து போ தொட்டு விடாதே…


உன் நீண்ட கூந்தலில்
அழகிய ஒற்றை சிவப்பு ரோஜா ….
தொடர்ந்து வா தொட்டு விடாதே
அபாய எச்சரிக்கையாய்…

உன்னகே தெரியாமல்….


உன் துப்பட்டாவின் சில
தூரிகைகள் தான்
வண்ணமிடுகின்றன
என் கவிதைகளுக்கு ….

உன் வரிச்சேலை பூக்களும்
என் கவிச்சோலை வரிகளும்
காதலிக்கின்றன
காரணம் புரியாமல்…

உன் காலடிச் சுவடுகளை
தவிர வேறு கோலங்களை இடுவதில்லை,
என் இதய வாசலில்…

என் கவிதைகளில் எப்போதும்
உன்னை மறைத்தே வைக்கின்றேன்,
உன்னகே தெரியாமல்….

என் கவிதைக்கு கிடைத்த
முதல் பரிசு நீ …

நீ வருவாய் என …


முற்றுப்புள்ளி வைப்பது இல்லை
மூன்று புள்ளி இட்டுத்தான்
வைக்கிறேன்…
என் கவிதைகளில் …
நீ வருவாய் என …

முதன் முதலாய்
உன் முன்னால் என்
நுரை ஈரல் பிராண வாயுவை
வெளி இட்டது,
கரியமில வாயுவிற்கு பதிலாய் …
நீ வருவாய் என …

நுரை ஈரலும் உரை எழுதியது
இப்படித்தான் ,
என் இதயத்தின் காதலுக்காக…
நீ வருவாய் என …

பின்னிரவில் சிந்திக்கிறேன்
புரியாமல் ,
உன்னை புகழ்ந்து கவி எழுத
நீ வருவாய் என …


அரை தூக்கத்தில் கூட
அழுது கொண்டிருந்தேன் ….
நீ வருவாய் என …

தூக்கம் தெளியும் முன்னே
துடித்து கொண்டிருந்தேன்
என் அதிகாலை துயில் எழுப்ப,
நீ வருவாய் என …

பித்துப் பிடித்த என் பேதங்கள்…


சப்தமே இல்லாமல்
சில கவிதைகளை
உதிர்க்கிறாய் …..
உன் அமைதியின் போதும் கூட …

நீ சப்தமிடும் போது தான்
என் கவிதைகள்
உன்
அமைதிகளை
பெறுகின்றன ….

உன் இறுக்கி முடிந்த
பின்னல் ஜடையில் தான்
சிக்கித் தவிக்கின்றன,
என்னுள் சில கவிதைகள் ….


ஒற்றைப் பூ போதாதடி
உன்
நெட்டைக் கூந்தலுக்கு ,
என் கவிதை பூந்தோட்டம்
காத்திருக்கிறது
தன்னை சூடிக்கொள்ள …


காரணம் தெரியாமல் கண்ணீர்
வடிக்கின்றன என் கவிதைகள்,
சில நேரம் ….
நீ சிரிக்க மறுக்கும் போதுதான் …

உன் மூக்கு சுட்டியில் முக்கால்வாசி
பிறை நிலவே தெரிகிறதே ….!
கரைந்தே விட்டதா கால்வாசி
வெண்ணிலவும்
உன் காதல் சுவாசத்தால் …?


மென் காதை குத்தும்
பொன் தோடுகள் வேண்டாமடி ….
பூட்டிகொள் அந்த பொன்னேடுகளை
உன்னை புகழும் என் கவி ஏடுகளை….

என் சிந்தனைக்கு சிற்பி நீ…


ஒவ்வொரு கவிதையாக
எழுதி வைத்து விட்டு
படித்து பார்க்கிறேன்
ஒன்று கூட அழகாய்
இல்லை உன்னை விட….

இதை விட ஏதேனும் கடினமாய்
கடந்து வந்தேனா என்று தினம் தினம்
புரட்டிபார்க்கிறேன் என் சரித்திரத்தை
பலமுறை…,,,
தினமும் கடந்து செல்கையில்
உன்னை ஒரு முறை ….

என் கவிதைகளை படிக்கும்
வாசகி நீ,
உன் கனவுகளை படிக்கும்
வாசகன் நான்…


பெயர் குறிப்பிட விரும்பாத வாச‌கி
இப்ப‌டிக்கு என் காத‌ல்…
சொல்லி சென்றது என்னிட‌ம்
உன்னில் சில‌ மௌனங்கள்…


என்னை செதுக்கும் சிற்பி நீ
உன் வைர‌ விழிகளால்…
உன்னை மட்டுமே காட்டும்
கவிதை சிற்பம் நான்
என் வைர‌ வ‌ரிக‌ளால் ….

தொலைத்ததில் கிடைத்தவை …..


உன்
ஒவ்வொரு சிகை அலங்காரத்திலும்
என்
கவிதைகள் திருத்தப்படுகின்றன …..

ஊர்தியை விட்டு
நீ இறங்கும் போதும்
நான் வெறித்து பார்கிறேன்..,
நீ அமர்ந்திருந்த இருக்கைகளை …,,,
உன் பிம்பங்கள் ஏதேனும்
மிச்சம்மிருக்கின்றனவா என்று !!!

உன் ஒவ்வொரு
புன்னகையிளும்
நான் தொலைந்து போகிறேன்
அழகழகாய் …..


தொலைந்து விடவே
எனக்கு சம்மதம் ,
என்னை தினமும்
தொலைத்து விட்டு
செல்லடி
என் செல்லமே !!!

சில சமயங்களில்
என் கவிதைகளை
படித்தவிட்டு நீ அழுகின்றாய் ….
உன் கண்ணீரை
படித்துவிட்டு நான்
கவிதை எழுதுகின்றேன் ….

உன் பார்வைகளோடு
போட்டி இட்டு பலமுறை
கிறுக்கி விட்டேன்
ஒரு முறை கூட
ஜெயிக்க முடியவில்லை
என் கவிதைகளால் ….

உன் உதாசீன பார்வைகளில் ….


என் அலைபேசியில்
இரண்டாம் முறை
கூட
குறுந்தகவல் செல்ல மறுக்கிறது
உனக்கு …..

கருவறையே எனக்கு
கல்லறையாகி இருந்தாலென்ன
என்று யோசித்தேன்
என் சின்ன அறையின்
ஒரு
மூலையில் அமர்ந்து …..


நீ
என்னிடம்
விட்டு சென்ற கொஞ்சல்கள்
கெஞ்சுகின்றன
என்னை விட்டு செல்ல வேண்டுமென்று ……

என் புகைப்பானின்
நுனியிலும்
மது புட்டியின்
சில படிகளிலும்
மீதமர்ந்து சிரிக்கின்றன
உன் புன்னகைகள் ….

நண்பனின்
சின்ன துன்பத்திலும்
என்
கண்ணீர் துளிகள்
பெருகி ஓடுகிறது
உனக்கும் சேர்த்துமாய் ….

சோகமான
திரை இசை பாடல்கள்
முதல் முறை
கேட்க்கும் போது மட்டும் உன் ஞாபகங்கள் …..
இரண்டாம் முறை
நான் கேட்க்கும் முன்
உன்னை பற்றிய நினைவுகள்
பேரலையாகின்றன
என் கண்களுக்குள் …

அதிலும்
என் கடைசி
சொட்டு கண்ணீர்
மட்டும்
ஏனோ உப்பு தன்மையாகிறது ….

மனசு
மட்டும் வேண்டும் என்றது
மீண்டும் உன்
அன்பு பார்வைகளை
அறிவு சொன்னது
அத்யாயம்
போதுமென்று …..

வாழ்வின்
சில அத்யாயங்களை
கற்று கொண்டேன்
உன்னால் …,,,
உன்
உதாசீன பார்வைகளுக்கும்
நன்றி பெண்ணே ….

உன்னை நினைத்து…


உன் சிறிய புன்னகையில்
சிதறிய சில செல்லங்களை
கவ்விக்கொண்டேன் என் கண்களால்….


ஒரு கோப்பை தேநீரில்
ஒரு சொட்டு உன் புன்னகை
அதை பருகிய உடன்
பசித்திருந்தது மீண்டும் என் காதல்…


நீ குடித்த பின் தூக்கி எறிந்த
தேநீர் குவளையில் மிச்சம் இருந்தன
சில புன்னகை துளிகள் ….

கண்டேன் கண்டேன்
காதலின் தலையெழுத்தை
நீ குடித்த பின் வைத்து விட்டு சென்ற
நீர் குவளையில் பதிந்த உன் விர‌ல் ரேகைகளில்…


புதிர் விடை போல‌ தேடிக்கொண்டு இருந்தேன்
உன் பெருவிர‌ல் ரேகையில்
என் காத‌லின் மையப்புள்ளியை தேடி….

உன் புன்னகை தேச‌த்தில்….


என்னை நீ கிள்ளி வைத்த இடங்களில்
சிவந்து போனது உன் வெட்கங்கள்…..

என்னை அடித்துவிட்டு அழுகிறாய்
என் க‌ன‌வில் காத‌லின் வ‌லியால் நீ….

உன் சிணுங்கல்களுக்கு
என் புன்னகையை உதிர்க்கிறேன்…
உன் மௌனங்களில் நீ சொல்கிறாய்
மற்றுமொருமுறை என்று….

என் சொப்பனங்கள் அனைத்தும்
உன‌க்கு அர்ப்பணம்
நீ உதிர்க்கும் புன்னகையால்….

நான் எத்திசை நோக்கினும்
உன் பூவிதழ் புன்னகையை
பிடித்துவிடுவேன்!
உன் இத‌ழுக்கும் என் கண்களுக்கும்
புலப்படாத புன்னகை விசையால்…

நீ தினம் ஒரு புன்னகையாவ‌து உதிர்த்து செல்
நான் கணம் ஒரு புலம்பலையாவ‌து கிறுக்கிவிட்டு செல்கிறேன்….

கதை … க(வி)தை….. காதல் …..


நம்மை பற்றி எழுதிய கதை
கவிதையானது நம் காதலால்…

என் கவிதை அனைத்தும்
கதை கதையாய் சொல்லும்
நம் காதலை ……


என் காதல்,
கவிதையானது
ஒரு பெரிய கதை….


வெறும் கதையாகிப்போகாமல்
காதலாகி போனது
என் கவிதை ….


கவிதை கவிதையாய்
ஒரு காதல் கதை ….

சிந்திப்போம் ….பிரிவோம் …. சந்திப்போம் …..


சிந்திப்போமா இருவரும் மாலை வரை
பிரிந்த பின்
சந்திக்க இருவரும் விடியும் வரை
நம் இனிய கனவில் ….!!!

டோரா ……உன் பயணங்களில்


…. டோரா … டோரா … அன்பே டோரா …

எனது நினைவுகளும் சேர்ந்து
பயணம் செய்கிறது…
உன் பயணங்களில் போது …. !!!


“பரிசோதனையின் போது
கொடுக்கப்படவோ அல்லது
காண்பிக்கவோ வேண்டும்”
பயண சீட்டு மட்டும்மல்ல
உன் மனதையும் தான்
என்னிடத்தில் !!!…..

“ஊனமுற்றோர் அமருமிடம்”
நீ என்னுடன் இல்லாத
பயணங்களில் நான் அமருமிடம் ….


“சரியான சில்லரை கொடுத்து
பயணச்சீட்டு வாங்கவும் ”
என் நினைவில் ..
மூழ்கி மறந்து விடாதே …

“துளை இட்ட நிலையிலிருந்து
எதிர் நிலை வரை பயணம் செய்யலாம்”
என் மனம் உன்னால் துளை பட்ட
நிலையிலிருந்து நான்
மரணம் எதிர் கொள்ளும் நிலை வரை
நீ என் மனதில் பயணிக் கலாம்” …

“ரூல்ஸை அனுசரிக்க ”
எனக்கு நீ இட்ட கட்டளை
உன்னோடு என் பயணங்களில் ….


“பயண சீட்டு இல்லாமல் பயணித்தால்
ருபாய் ஆயிரம் அல்லது மூன்று மாதம்
சிறை தண்டனை”
நீ இல்லாமல் பயணித்தால் ….?…

நீ எனக்கு குழந்தையடி


நீ உண்ணும் போது என்னையும்
சேர்த்துக்கொள்.
உன் “சிறு கை அளாவிய கூழ்
எனக்கும் வேண்டும் !!!

“தலைப்புக் கவிதைகள்”


“ப்ரியமுள்ள ப்ரியசகி”

“ஆயிரத்தில் ஒருத்தி”
“உன்னைப் போல் ஒருத்தி”
“யாரும் இல்லை கண்ணே”

“உன்னை நினைத்து ”
“சில சிறப்பு சிந்தனைகள்”

“உன் பார்வை பட்டறையில்”
“என் கெஞ்சலும் உன் கொஞ்சலும்”
“சந்தோச மாயங்கள்”

“அர்த்தமுள்ள உன் ஆரவாரங்கள்”
“பித்துப் பிடித்த என் பேதங்கள்”

“உன் இதழ் தொகுப்புகள்”
“உன் பேசும் பார்வையும் பேசாத வார்த்தைகளும்”
“சொல்லடி சகியே”


“வரம் ஒன்று கேட்கிறேன்”
“மீளுமா மறுபிறவி உன்னோடு நான்”

இப்படியெல்லாம்
உன்னை பற்றி
தலைப்பு மட்டும் எழுதி விட்டு
திரும்பி வர
தலைப்புகளும் கவிதைகள்
ஆனது என்று தெரியவில்லை எனக்கு…!!

எழுதுகோல்..


உன்னை பற்றி எழுத
ஐந்து விரல் போதாதது
என நினைத்து
பிரம்மன் படைத்த
ஆறாம் விரல்….

படித்தததில் பிடித்தவை : அலைபேசி குறுந்தகவல்கள்


நம்முடைய அழுகையும்
சிரிப்பையும் ரசித்த முதல்
ரசிகை “அம்மா”……
**********************************************************
உன்னை போல ஒரு நண்பன் இருந்தால் போதும்
வாழ்க்கை முழுதும் ரசிக்க ..!
இருப்பினும் ஒரு வாழ்க்கை போதாது
உன்னை போல ஒரு நண்பனுடன் ரசிக்க ….!!
**********************************************************
செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும்
புன்னகையே சிறந்தது ….
**********************************************************
கண்கள் திறக்கும் வரை கனவு நீடிக்கும்
கண்கள் மூடும் வரை உன் நினைவு நிலைத்திருக்கும் ….
**********************************************************
உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்
அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன்னையும் உன் நினைவுகளையும் ….
**********************************************************
ஆசை படுவதை விட்டு விடு
ஆசை பட்டதை விட்டு விடாதே !!!
**********************************************************
உறங்கும் முன் உன் பெயரை
ஒரு முறை சொல்கிறேன் …!
ஒருவேளை உறக்கத்தில் நான்
இறந்து போனால் இறுதியாக
சொன்னது உன் பெயராக
இருக்கட்டுமே கண்ணே !!!
**********************************************************
கல்லறை மீதும் நான் உறங்குவேன்
கண்ணே !!!.
நீ வந்து தாலாட்டு பாடினால் …
*********************************************************
ம்ம்ம் ….. ( இது அவள் எனக்கு அனுப்பிய குறுந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தகவல் ………
**********************************************************

மின்னஞ்சல் முகவரி


எனது புதிய மின்னஞ்சல் முகவரிக்கு
பயனர் சொல்லாக என் பெயரையும்
கடவுச் சொல்லாக உன் பெயரோடு சேர்த்து
உன் வயது பதினாறு என்றேன்.!!!
மின்னணு பூக்கள் மினுமினுத்தன…
” நீங்கள் சரியான கடவு சொல்லை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் !!!” என்று……..

அலைபேசி உன் இதழ் பேசி


என் அலைபேசிக்கு
நீ அனுப்பிய குறுந்தகவல்களை
அழிக்கவே ஆயிரம் முறையாவது
யோசித்து இருப்பேன் ….
உன் இதழ் பேசிய பெரும்
தகவல்களை என் இதயத்தில்
இருந்து எப்படி கண்ணே
அழிப்பேன்…??????

தினமும் உன்னை கவனி


கண்ணாடியில்
உன் முகம் பார்த்தால்
என் முகம் தெரியும்
எனக்குள் நீயாதலால்!….
தினமும் உன்னை கவனி…!!!

விட்டுச்செல்கிறேன்

விட்டுச்செல்கிறேன்
என் விசும்பல்களை
உன்னை விட்டுச்செல்ல
மனமில்லாமல் !!!

காதல் போர்களம்


உன் நினைவில் நான்
என் நினைவில் நீ
நம் நினைவில் காதல்
நம் பெற்றோர் நினைவில் நோதல்
பின் அவர்களிடையே மோதல்
இறுதியில் நம் காதல் சாதல்
தேவையா இது ?

இனிமை கவிதை


சாறை சாறையாய் எறும்புகள்…!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகளின் மீதுதான்
கண்ணே !!!

காதலின் வளர்ச்சி


உன்னை காணும் போது
என் காதல் ஒரு சென்டி மீட்டர்
வளர்கிறது !!!
உன்னை காணாவிடில்
என் காதல் ஒரு மீட்டர்
குறைகிறது !!!

செவ்வாய் தோஷம்

செண்பகத்து வாசம் சந்தனமா வீசும்
அத்தமக கூட அப்படிதான் நேசம்
எத்தனையோ வருஷம் கட்டிகாத்த பாசம்
பார்த்த சனம் ஊரெல்லாம் ஏசும்
ஜாதகத்துல வந்த செவ்வாய் தோஷம்
போட்டுவித்தது புதுப்புது வேஷம்
என் கனவுக்கோட்டை அத்துனையும் நாசம் !!!

புலம்பல்களில் சில


உன் பார்வைகள் மட்டும் போதும்
என் எழுதுகோல் எழுத
துவங்கி விடுகிறது !!!

என் எழுதுகோல் கூட
தன்னை உருக்கி
உன்னை உயிரகியது
என் கவிதைகளில் !!!

உன் மௌனம் மட்டும் போதும்
என் மனம் பல மொழிகளை
கற்று கொள்கிறது !!!

என் சோர்வு கொண்ட மனதில்
கூட சுகமாய் நடமாடுகிறது
உன் ஞாபகங்கள் …!!!

என் நெஞ்சில் மட்டுமல்ல
என் காதலும் ஈரமனதுதான் !!
காகிதத்தை நனைகிறேன்
என் கவிதைகளால் !!!

என் கண்ணீரின் கடைசி
துளியும் கூட
உன்னைத்தான் நனைக்கிறது !!
என்
கருவிழிக்குள் கூட
இருப்பவள் நீதானே !!!

என் காதல் எனும் வலையில்
சிக்கிய மீன்கள்
உன் “கண்கள்”

கண்ணாடி மட்டுமே உன்னை
பிரதிபலிக்கும் என்றிருந்தேன் …!!!
என் கவிதைகள் கூட உன்னை
பிரதிபலிக்கின்றன !!!

உன் கண்களின் அபிநயத்திற்கு
அந்த கதகளியும் தோற்குமடி!!
செப்புமொழி பதினெட்டுடையாள்
இவள் சிந்தனை ஒன்றுடையாள் !!!

காகிதமும் கதறுதடி
உன்னை கவிதையால்
வடிக்கவில்லை என்று !!!

முக்காலமும் நீயதலால்
என் மடிபையில் தூங்குதடி
கை கடிகாரம் !!!

குடைக்குள் மழை


உன் குடைக்குள் தானடி
நனைந்து போனேன்
காதல் மழையில்

மின்னஞ்சல்


பொருளடக்கமற்ற ஒரு
மின்னஞ்சலில் கூட
ஒரு பொருளாய்
பயணிக்கிறோம் நாம்…!
அனுப்புனர் நானுமாய்
பெறுனர் நீயுமாய்…!!

அன்பலை


உன்னை பற்றிய நினைவுகளை
ஒரு தொடராகினால் கூட
எந்த பண்பலையாலும்
ஒலிபரப்ப முடியாது
என் அன்பலையை ….!!!

எனக்குள் நீயாதலால்

இறுதியாக ஒரு வாய்ப்பு
அளிக்கிறேன் உனக்கு…
உறுதியாக சொல்லிவிடு
உனக்குள் நீ இல்லை என்று

சொர்கத்தின் வாசற்படி

உனக்காக உன்னை பற்றி
எழுதிய கவிதைகள்
உன்னால் படிக்கப்படும்போது
சொர்கத்தின் வாசற்படி
சுகமாய் தென்படுகிறது..!
கவிதையோடு சேர்த்து
எனக்கும்..!

புன்னகை பூவே


உன் கூந்தலின் மல்லிகை பூ
வாடினால் மணம்
மாறி போகும் …!!!
புன்னகை பூவே
உன் முகம் வாடி போனால்
என் மனம்
மாறி போகும் …!!!

செல்லமே


உன்
செல்லங்களை சேமித்து
வைத்தேன்
சேமிப்புகளாய்
என் இதயத்தில்..!!
அசலும் வட்டியுமாய்
நீ
கிடைத்தாய்
என் அன்னைக்கு
மருமகளாய்
நம் இல்லத்தில்….!

வெளிப்பாடுகள்

உன் உதடுகள் ஒலிக்க
விரும்பியதை
உன் கண்கள்
ஒளிர்கின்றன !!!

உன் மனம் சொல்ல
விரும்பியதை
உன் மௌனங்கள்
சொல்கின்றன..!!

நான் சொல்ல
விரும்பியதை
என் கவிதைகள்
சொல்கின்றன..!!

சோதனை

என்னை மறைமுகமாக
சோதனை இடுகிறாய்
உன் பிறைமுக
பார்வையால் !!!

கிறுக்கல்கள்


உன்னை பற்றி கண்ட இடங்களில்
கிறுக்குவதில்லை…
ஏனெனில் அவைகள்தான்
என் கவிதைகள் !!!

அடி கிறுக்கி ..!
கிறுக்கு பிடித்த என்
கிறுக்கல்கள்
உன் மீது உள்ள
கிறுக்கினால்
கிறுக்கியவை !!!

காகித ஏக்கம்


உன்னை பற்றி
சில வரிகளையாவது
கிறுக்கிவிட்டு செல்கிறேன்…
பாவம் உன் மீது
இந்த கிறுக்கு பிடித்த
காகிதங்கள்!!!

இனிய உளவாக

உன்னை பற்றி கிறுக்கிய
வார்த்தைகளுடன்
போர்க்களத்தில் போரிட்டன
பொறாமை கொண்ட சில விட்டுப்போன
வார்த்தைகள் !!!

பிறை


உன்னை பற்றிய நினைவுகள்
எனக்கு வளர்பிறையாய் !!!
என்னை பற்றிய நினைவுகள் மட்டும்
உனக்கு ஏன் தேய்பிறையாய் ???

மொழிபெயர்வு


உன் மௌன மொழிகளைத்தான்
கண்ணே
மொழிபெயர்க்கிறேன்
இப்படி கவிதைகளாய்!!!

நட்பின் புரிதல்….


ஓராயிரம் பேர் முன்னால்
உன்னை பற்றி தெரியும் என்று சொல்வதை விட
உன் கண் முன்னால் என் ஒரேயொரு
பார்வையில் மட்டுமே பதில் சொல்ல
விரும்புகிறேன் உன்னை பற்றி
எல்லாம் தெரியும் என்று!!!

இல்வாழ்க்கை

கிழிந்த துணியாம் கணவனை
கூர்நுனி ஊசியாம் மனைவியால்
தைக்கப்படும் “இல்வாழ்க்கை”…

பெற்றோர்


உயிருக்கு மெய் கொடுத்து
மெய்க்கு உயிர் கொடுத்த
உயிர்மெய்”….

நாம்


நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது
நாம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்…
அதனால்தான் காதலுக்கு கூட “நாம்” தேவைபடுகிறோம்…!!!

விட்டு செல்ல மனமில்லை

சகியே !!!
நீ படிகளில் வேகமாக ஏறி செல்லும்
போது விட்டு சென்ற படிகளை எல்லாம்
நான் ஏறிவருகிறேன்..!
உன் நினைவு கொண்ட நெஞ்சோடு…

காவல்


என் கனவுக்குள்ளும் குளிர்ச்சி கண்டேன்
காரணம் யாதென்றும் அறிந்தேன்
வெண்நிலவுடன் வெளிச்சமாய் என்
வீட்டு முற்றத்தில் விடியற்காலை வரை
என் கனவுக்கு காவல் இருந்தாய்
வெண்பனியாய் …
உன் காவலுக்கு ஓய்வளிக்க
காத்திருந்தேன் விடிகாலை
விடிவெள்ளியாய்…

கற்றல்


நான் காதலிக்க கற்று கொடுக்கிறேன்
உன்னை காட்டி என் கவிதைக்கும்
என் கவிதையை காட்டி உனக்கும்…!!!

அள்ளிச் சென்ற வானம்


எதிரே வந்தாள் ஒருவராக - என்னை
கடந்து சென்றாள் இருவராக - அவள்
உடன் செல்வது என் மனமல்லவா !!!

வறுமை


உன்னை பற்றிய கவிதைகளில்
வறுமை தென்படுகிறது..
இரண்டு வரிகளில் முடித்து விடுகிறேன்
நீ என் கண்களில் அதிகம் விழாததினால்…!!!

உன் கருங்கூந்தலுக்கும்
கண்ணிமைக்கும் மை
போதவில்லை கண்ணே
என் ஓவியத்தில் !!!

உருகுதே எழுதுகோலும் உன்னை பார்த்து


என் சட்டை பையில் உள்ள
எழுதுகோலும் உன்னை எட்டி பார்த்துவிட்டது
போலும் ….. உருகுகின்றதே இப்படி
கவிதைகளாய்…!!!

இதயச் சுமை


எனது நினைவு கொண்ட
உனது இதயம் கணமானதா..?
அதையும் என்னிடமே கொடுத்து விடு
சேர்த்து சுமக்கிறேன் சுகமாய்…!!!