Monday, January 24, 2022

 

என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....4:

(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)

பூசாத ஓட்டு வூட்டு பொறத்தாண்ட பேசாத பங்காளி தோட்டம்... ஊசாத ஒரு தக்காளி பழம் திங்க மனசெல்லாம் நோட்டம்... எட்டி வெச்ச தூரத்துல எத்தனை தக்காளி பழம்!!... அப்பப்பா!!!...தெரியாம பறிச்சா கட்டி வெச்சு அடிச்சுருவா கமலா,காதுல கேட்டா...? அய்யய்யோ...!! எப்படிதான் தீக்குறது இம்புட்டு ஆசைய...? கேட்டுத்தான் பாப்போமே... கெடைக்குமா இல்லையானு... பூச திங்க ஆசையானு ஏச, பழம் திங்குற ஆச பறன் மேல படுத்துக்கிச்சி...தேறாமத்தான் போச்சு என் ஆச ஆறாம் வவுப்பு படிக்கீல... அறையாண்டு லீவுல ஆடுமேச்சி திரிஞ்சப்போ பக்கத்து காட்டு பண்ணையாள்கிட்ட பக்குவம சொன்னேன் , யாரும் பாக்காம எனக்கு ஒரு தக்காளி பழம் வேணும்னு, கையூட்டா கொடுக்க ஏரிகற எலந்த மரத்துல தெரண்ட பழம் தேடி கை காலு முளு குத்தி காலு பூர வீங்கி போச்சு ... விடிஞ்ஞா பொங்க வெக்கிற நேரத்துல புள்ளக்கி இப்படி ஆயிடுச்சுனு பொங்கி தீர்த்து புட்டா புள்ளய பெத்த மவராசி... தக்காளி பழம்தான் வேணும்னு சொல்லி இருந்தா சந்தீல வாங்கி வந்து சாயங்காலமே கொடுத்துதிருப்பேனே கண்ணு... ஏங்கண்ணு இப்படி பண்ணிண எம்மனசு வலிக்குதுடானு ஏங்கி ஏங்கி அழுதா கமலா அம்மா.. ஏன்காலு வீக்கம் பார்த்துதான் காவேரி வெள்ளம் கறபொறண்டு ஓடுச்சு கமலா கண்ணுல... வலி கூட தெரியல ஆனா துளி துளியா தண்ணி வந்தது ஏங்கண்ணுலயும் ஏங்கண்ணு ஏங்கண்ணுனு சொன்னவள பார்த்து... வீக்கங்குறைய ஊசி போட்டு ஏன் தேக்கங்குறைய சிந்திச்சா நடுசாமகோழி கூப்புடுற வரைக்கும்... கோட்டர் பாட்டல் மூடில பழைய பாவாட நாடா திரி போட்டு சீமதண்ணி ஊத்தி பாட்டல்திரி வெளக்கு வெளிச்சத்துல பாததேடி போனா பஞ்சாயத்து ரோட்டேரி... வெடியகால வெள்ளி மொளக்க சேந்தமங்கலம் சந்தக்கி தக்காளி பழத்த, தணிச்சி கட்டி வெங்காயத்த மேல கட்டி வெள்ளாளர் அனைவரும் தள்ளாத வயசலயும் கல்லு ரோட்டுல, காலுகடுக்க சைக்கிள் முதிச்சி, நிப்போ பேட்டிரைட்டு வெளிச்சத்துலயும் சான்யோ ஜப்பான் காயல் வெளிச்சத்துலயும் கல்லு இடரி தள்ளி தள்ளி போனாங்க... கூடையில ஒன்னும் சாக்கு பைல ஒன்னும் தவறிவிழுந்த தக்காளி பழத்த முந்தான சீலீல ஒருகைல மடிச்சு புடுச்சி, மறுகைல பழத்த பொறிக்கிபோட்டு, முழுசா வெடியகுள்ள வூடு வந்து சேர்ந்துட்டா எங்கம்மா... வெடிஞ்ச பொறவு நா எழுந்துமே ததும்பி ததும்பி சொன்னா தக்காளி பழம் தம்பிக்கு இந்தானு... எப்படி பழம் வந்ததுனு நான் கேட்கும் முன்ன பொறுக்கி வந்த பழமெல்லாம் போதுமானு கேட்டா... தக்காளி தன் வரலாறு கூறுச்சி தம்பிக்குத்தான் தான்பொறந்தேனு. அம்மா மட்டும் ஆதரவு கொடுக்கலனா அனாதயா காலைல அழுத்தி மெதிச்சி ஆகாதபழமாயிருப்பேன். அம்மா வந்து சொல்லி தான் தம்பியாச தீர்க்க கூடதாவி குதிச்சு வந்தேனு..ரெண்டு பழத்த எடுத்துக்கிட்டு எனக்கு இது போதும்... மிச்சமெல்லாம் நீங்க சாப்புடுங்கனு சொன்னேன்... ஓசி வாங்கவும் மனசில்லாம வெலபோட்டு வாங்கவும் காசில்லாம திருடி திங்க திண்ணம் இல்லாம எப்படியோ பழம் வாங்கி கொடுத்தா எம்மவராசி ... மடி கூட்டி கொண்ணாந்த பழம் அது வெறும்பழமில்ல... பாசம் பூர கொட்டி வச்ச எங்கம்மாபாசபழம்... எல்லாசாமிகிட்டயும் கேட்டேன் எம்மவராசிய எங்கிட்டயே கொடுத்துரு எல்லா தக்காளி பழமும் உனக்கே தரேனு... கையூட்டு வாங்கிகிட்டு எம்மவராசிய திருப்பி தர எந்த சாமிக்கும் மனசில்ல... நசுங்கி போனபழம் போல பொசுங்கி போய்டா.. இனி யாராலும் திருப்பி தரமுடியாம உருகொலஞ்சி போச்சு... புதுசா பூ புடிச்சு புது பழம் பூக்கும்ன்னு குடுகுடுப்பகாரன் கோழிகூப்புட சொல்ரான்... மவராசி பூவிழி மனசு வெச்சா மாசம் பத்து போனா மானு குட்டி தாவி வரும் மல்லீப்பு வாசத்தோட மேகலைக்கு மறுபொறப்பா...காத்து கெடக்கேன் காமலாவின் மறுபொறப்புக்கு

 என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....3:

(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)

பொழப்பத்தவன் மனசு பூர பெத்தவ நாபகம். பொறன்டு பொறன்டு படுத்தாலும் செத்தவ நாபகம். எட்டி எட்டி நா உதச்சப்ப எங்கம்மா படிச்சா என்காவ .. மாம அடிச்சாரோ மல்லீப்பூ செண்டால... அத்த அடிச்சாளோ அரளிப்பூ செண்டால...ஆராரோ ஆரிரரோ... அடிவாங்காமலயே அடிச்சு போட்டமாறி தூக்கம் வந்தது அந்த பாட்டால அம்மா மடியில...

வூட்டு சண்டைல ஊரு உறங்கின நேரத்துல இக்கத்துல என்ன வெச்சிக்கிட்டு, இருகையும் புடிச்சுக்கிட்டு கருவாபுள்ளயோட காவேரில இறங்கிடலாம்னு கடகலத்துமேடு ஏறி காட்டுராச தோட்டம் தாண்டி ஏரிக்கற சேர்ந்த போது எம்மனசுல ஒரு ஓசன. ஏம்மா.!.. நான் வேணுனா அப்பிச்சி வூட்டு பண்ணையத்துல கட்டுத்தாற வேலைய பார்த்து காலந்தோறும் கஞ்சி ஊத்தி  காப்பாத்துறேன். திண்ணைல ஓரமா இருந்துக்கலாம். பண்ணைல வேல இருந்தா பகல்ல பாதியும் ராத்திரிக்கு பாதியும் பங்கு போட்டு செஞ்சிடலாம். வேல செஞ்ச காசுக்கு கொசவன் சட்டி வாங்கி கம்பு சோளம் தீட்டி கூட்டு கொளம்பு வெச்சு கூட்டாவே சாப்பிடலாம். கெழக்கால கோழி பண்ண ஓரத்துல ஒத்த தாவரம் இருக்கு. குளுராம இருக்க இரட்டகாடி ஓடு போட்டு இருக்கு.. நாம மூனுபேரும் படுத்துக்கலாம்... அப்பிச்சி ஒன்னும் சொல்ல மாட்டாரு... அம்மாயியும் கூடவந்து படுத்துக்கும்...என்ன பண்ணையத்துல வெச்சிடு... அக்காவும் நீயும் காட்டு வேல செஞ்சுடு.. மொத்த கூலியும் சேர்த்தா மெத்தவாங்கி போட்டுக்கலாம்னு சொன்னேன்... காலங்காத்தல கருக்கல்ல எழுந்தா மால மசங்கக்குள்ள எல்லா வேலயும் முடிச்சிடலாம்.நாம ஏன் காவேரில சாகனும்னு கேட்டேன். 

பொழைக்காம போயி பொறந்தவன் வீட்டுல பொடக்காலில இருந்தாலும் பொறந்தவனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க... இக்கத்த வுட்டு இறங்கல பெத்த புள்ள வெக்கத்த வுட்டு சொல்லுது... சோறு போட நானிருக்கேன்னு. சாவு மட்டுமே தீர்வு அல்ல... சண்ட போட்டாவது புருசனோட பொழப்ப பொழச்சி தீக்கனும்னு பொட்டபுள்ளய பொற முதுகுல தூளி கட்டி இடுப்பு சேலய இருக்கி கட்டி இக்கத்துல பையன இருக்கி புடிச்சு எங்கம்மா நடந்தா வீட்ட நோக்கி... 

நாப்பது வருசம் பொழச்சி புட்டு சண்டாளிக்கு, இக்கத்துலயும் பையனில்ல... பக்கத்துலயும் புள்ள இல்ல... புருசனையும் வூட்டுல உட்டுபுட்டு புள்ளய காப்பாத்த எல்லய தாண்டி சந்தக்கி போனா.. காயி கசுரு வித்த காசு எடபோட்ட இராசிகல்லு வூடு வந்து சேர்ந்துச்சு..தாயி உசுரு செத்து போச்சு..பொணம் மட்டும் போச்சு ரெண்டு நாளு பிணவறைக்கு.. மூனா நாளு காலைல எல்லு தண்ணி எறைச்சி இறக்கிட்டேன் குழில. சாவு மட்டுமே சோர்வாச்சு எனக்கு.

பக்கத்துல வந்து எம்புள்ள கேட்குறான் இக்கத்துல என்ன தூக்குன்னு. பிள்ள சொல்லும் முன்னாடி நான் கேட்டேன் எனக்கு சோறு போடுவியானு... கட்டி புடுச்சி சொன்னான் அப்பா எனக்கு பசிக்குதுனு... சொல்ல ஒன்னும் இல்ல... மூக்கு பொடச்சி கண்ணு கலங்கி வாயி கொலர நானும் சொன்னேன்... ஆராரோ... ஆரிரரோ... மாம அடிச்சாரோ மல்லீப்பூ செண்டால... அத்த அடிச்சாளோ அரளிப்பூ செண்டால...ஆராரோ ஆரிரரோ....


 நான் எழுதி திரும்ப படிக்க நாக்கெல்லாம் கொலருது. நாளும் கிழமையும் ஓடிபோக நெஞ்சம் எல்லாம் பதருது... பாவி மனசு கேட்காம பிள்ளமனம் கள்ளுபோல பெத்த மனச தேடுது. கண்ணு ரெண்டும் குலமானாலும் கருத்த மேகம் புயலானாலும் பட்டமரம் தழைக்குமா?. பாழங்கிணறு இறைக்குமா?.  ஆயிரம் உறவு இருந்தாலும் அம்மா இல்லாட்டி என் அக்காவும்  நானும் அனாதைதான்...

 என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....2:


(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)

எம்புள்ள பொழக்கோனும்னு என்னனென்னவோ செஞ்சன்னிக்கு சும்மா இருக்க மாட்டியானு நான் கேட்க .... சுத்துபட்டு ஊரும் பிள்ள பித்து புடுச்சவனு புழங்காகிதப்பட... செத்த நேரம் கம்முனு இருக்கலாமுனா முடியல பாப்பானு மவகிட்ட மனகொரய கொட்ட... புத்தி கெட்டு திரியாதமானு மவபாட்ட மவளா இருந்து சொல்ல... ஏ பிள்ள இப்படி கஷ்டபடரனு அம்மா கேட்டா நீ கொடுத்த சீதானம் செஞ்சோத்து கடனுக்கே பத்தலம்மானு சொல்ல ... என்னத்த கொடுத்தேனு எகத்தாலும் பேசி எங்கப்பன் கொடுத்தான் நீ யென்ன கொடுத்தனு நுரண்டி இழுக்க.. எம்பொறவி பொழக்கோனும்னு விட்டுபோறன், எம்புருசன் கேட்ட என்ன சொல்லுவேன்னு சொல்லி கொஞ்சம் மிரட்ட.... எங்கப்பன் போட்ட சீதானம் ஊமவளுக்கு போட்ட, நீங்க என்ன செஞ்சீங்கனு கணக்கு கேட்டு... எழுதிகம் பண்ண என்தம்பி இருக்க நீங்க யாருனு மச்சான்னு கேட்க... மாமனும் மச்சானும் மண்ணிப்பு கேட்க... உங்கப்பன் கொடுக்கலனாலும் ஊன்தம்பி கொடுப்பான்புள்ள கலங்காத சொல்ல... அண்ணமாருக்கு பொங்க வெச்சா அரண்மனைக்கு வருவானாம் பேரன்னு ஆசப்பட்டு செய்ய... ஆத்தாலுக்கு பொங்க வெச்சா காத்தால குடும்பம் சேர்ந்திருங்கண்ணு சொல்லி பொங்கலும் மாவிளக்கும் பூசையொடு செய்ய...இன்னும் எத்தனையோ கதையிருக்க எனக்கு ஒரு சீலை துணி எடுத்துதா கண்ணுனு கேட்க நான் கொடுத்ததோ கடைசியா வெள்ளைல ஒரு கோடி துணி... கமலா எதுக்கு துணினு கடைசி வரைக்கும் சொல்லல... கலருதுணி எடுத்து வெச்சி காத்திருக்கேன்...எப்ப வருவ என்தாயே...கமலா.?

 என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....1:


(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)

ஒருத்தி மட்டுமே வாழ்ந்தா எனக்காக ஒருகாலத்துல... உசுருபூராம் என்மேலனால தரிசு பூராவும் தங்கமாச்சு... எனக்காக வாழ்ந்ததில் என்னதான் சுகமோ அவளுக்கு... என் மகனுக்காக வாழ்ந்து பொறவு சொல்லுரேன் சுகமென்னானு... ரெண்டாம் வவுப்பு படிக்கீல  ரெண்டே ரெண்டு போண்டா வேனும்னு இருட்டு கட்ட நான் கேட்க.. மாவு இல்ல கண்ணு மாசம் போன கூலி வரும்;மாவு வாங்கி சுட்டு தாரேனு சொன்னா... மாசம் வர பொறுக்க முடியாது இப்பவே வேணும்னு அடம்புடிக்க அம்மாயி வீட்டுக்கு தடம் பார்த்து கொண்டிருந்தாள் தமக்கை ஒருத்தி. இன்னேரம் மாவு வாங்க இருட்டுக்குள்ள அதுவும் இந்த காட்டுக்குள்ள எங்க போவனு என்ன பெத்தவன் சமாதானம் சொல்லி கொண்டே இருக்க ; இருங்க ஒரு நிமிஷம் வாரேனு சட்டுனு கெளம்பி போய் கெழக்கால அப்பமூட்டுள சீமகருவேல காட்டுக்குள்ள சீமெண்ண லாந்துர கொண்டு சீதனமாக கடலமாவு வாங்க போனா செல்லம்மாக்கிட்ட(அவங்க அம்மாகிட்ட)... ஏபுள்ள இந்த நேரம்னு தங்கம்மாள(எங்கம்மாகிட்ட) கேட்க குன்னுடையான் கவண்டன்(என் அப்புச்சி தாத்தா) குறி பார்த்து கேட்டான் " புள்ள எதாவது புருசன் பொஞ்ஞாதி சண்டையானு ". இல்லப்பானு சொல்லி முடிக்க~ காய்கசுரு போட்டு காவி துணி மூடி பொறந்தவன்(என் மாமன்), சாக்கு பைல போட ... அட நான் வந்தது மறந்துருமேனு முந்தான சீலைல முடி போட்டது அவுத்து, தலைக்கு தேக்க நாலுகரண்டி கடலமாவு வேணும்னு கேட்டு காலைல கடன் கொடுத்துடரேன்னு சொல்லி ... நாலு தலைக்கு பத்தாது நாலுகரண்டி சேத்தே போட்டு கொடுனு கேட்கமுன்ன நங்கியாளுக்கு (கணவரின் அக்கா) அறைபாக்கெட் மாவு அல்லி கொடுத்தா மவராசி (என் மாமன் மனைவி)... வாங்கி வந்த வேகத்துல , புள்ள தூங்கிட்டா என்ன செய்யனு பதட்டத்துல , அள்ளி கொட்டி கலக்கீல மண்ணு கழந்து போச்சு... கொரவன்மொரத்துல பொடச்சும் கொஞ்சம்தான் மண்ணு போச்சு... சல்லடைல சலிச்சு ஏங்கல்லெடுப்பு கூட்டதான் அந்த மண்ணடுப்ப கூட்டுனா சண்டாளி... வடசட்டில சுட எண்ணெ பத்தாதே எதவெச்சு சுடனு யோசனைல வெங்காயம் அறிய; செவப்பு இரத்தம் பூர வெள்ள இரத்தமா வடிஞ்சுது என்ன பெத்தவ கண்ணுல... அம்மா அலாதமானு நான் சொல்ல நாளு வெங்காயம், மூனு கள்ளு உப்பு , ரெண்டு ரக்கு  கரியபில்ல , ஒரு மொளவா போட்டு , கொளம்பு தாளிக்கும் கரண்டில அஞ்சு போண்டா  சுட்டு மண்ணடுப்பு சூட்டுல மார்ழி மாச குளுருல வெதுவெதுப்பா கொடுத்தா கமலாஅம்மா... அக்காவுக்கு உனக்கு அப்பாவுக்கு? னு நான் கேட்க... விடிஞ்பொறவு அவங்களுக்கு சுட்டு தாரேனு சொல்லிட்டு, போனா கரண்டி கலுவ... ஏக்கா..? அம்மா எனக்கு மட்டும் சுட்டு தந்துனு நான் கேட்க, ஒருவேல விடியாமலே போய்டா என்ன செய்யனு சொன்னா அக்கா... அப்ப எல்லாரும் சாப்புடுங்கனு நான் சொல்ல ... நாங்க எல்லாம் முன்னவே கம்மஞ்சோறு கறைச்சி சின்ன வெங்காயம் கடிச்சி குடிச்சிட்டோம்...தம்பி மட்டுமே போண்டா வேணும்னு சாப்டுல...ராத்திரிக்கு ஆயாசாமி வந்து தம்பி வயித்த பாக்குமுனு சொல்லி அதனால வெறும் வயிறு வேண்டாமுனு மெரட்டி அஞ்சையும் திங்க வெச்சா சுமதிஅக்கா ... ஒரு மொளகா காரத்துல ஒருமணிநேரம் தூக்கம் வர்ல...ஒஞ்ஞிரிச்சு படுக்கையில ஒருசத்தம்.. என்னனு எட்டி பார்த்தேன்... தக்காளி பழம் கூடைல கட்டி அவர காய அடில கட்டி நாமக்கலு மார்கெட் போக சைக்கிள்ள காத்து அடிச்சு சாம கோழி கூப்பிடீல எலுப்பிவிடுனு சண்டைக்கு நின்னாறு எங்கப்பன் அதான் பழனியப்பன்.. காபிதூளு இல்லாம கருவெல்லம்போட்டு கொத்தமல்லி தண்ணிய வெச்சு கோளாறா எலுப்பி விட்டா எங்கம்மா கமலா... ஊருக்கு முன்னாடி வித்துப்புட்டு நேரங்காலமா வூடு வந்து சேருடா.. கள்ளு குடிக்க போய்டாத.. காட்டு கள்ளு ஊட்டுக்கே வரும்னு சொல்லி அனுப்பினா நல்லம்மா என்ற பாட்டி... மறக்காம கடலைமாவு வாங்கி வாங்க மகனுக்கு போண்டா போடனும்னு கெழக்காட்டு கிணத்தொறம் வரைக்கும் வண்டிதடம் குழி தாண்ட சைக்கிள்வண்டி தள்ளி வந்தா எங்கம்மா... பஞ்சாயத்து ரோட்டேரி பக்குவமா வாங்கி வாரேன பயப்படாம வீட்டுக்கு போனு பாலு பீச்ச நேரமாச்சுனு சொன்னாரு பழனியப்பன். நாலு கல்ல முட்டாயி நாலுபாக்கெட் கடலமாவு நமக்கு தானு வாங்கி வந்த எங்கப்பன் இப்பவே போண்டா வேண்டாம் பயன் அடம் புடிக்கிரண்ணக்கி சுட்டு குடுனு சொல்லிதான் குடுத்தாரு.. பொழுதான போண்டா வேனும்னு அடம் புடிச்சி போண்டா சுடவெச்சி எல்லார்த்தையும் போண்டா நான் திங்கவெச்சேன். மாவு தீர்ந்த பொறவு ஏஅடமும் தீர்ந்து போச்சு... எழுதாத இன்னும் ஒரு இலக்கணம் மண்ணுலகில் இருப்பின் அது எம்தாயும் என்குடும்பமும் மட்டுமே...