என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....3:
(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)
பொழப்பத்தவன் மனசு பூர பெத்தவ நாபகம். பொறன்டு பொறன்டு படுத்தாலும் செத்தவ நாபகம். எட்டி எட்டி நா உதச்சப்ப எங்கம்மா படிச்சா என்காவ .. மாம அடிச்சாரோ மல்லீப்பூ செண்டால... அத்த அடிச்சாளோ அரளிப்பூ செண்டால...ஆராரோ ஆரிரரோ... அடிவாங்காமலயே அடிச்சு போட்டமாறி தூக்கம் வந்தது அந்த பாட்டால அம்மா மடியில...
வூட்டு சண்டைல ஊரு உறங்கின நேரத்துல இக்கத்துல என்ன வெச்சிக்கிட்டு, இருகையும் புடிச்சுக்கிட்டு கருவாபுள்ளயோட காவேரில இறங்கிடலாம்னு கடகலத்துமேடு ஏறி காட்டுராச தோட்டம் தாண்டி ஏரிக்கற சேர்ந்த போது எம்மனசுல ஒரு ஓசன. ஏம்மா.!.. நான் வேணுனா அப்பிச்சி வூட்டு பண்ணையத்துல கட்டுத்தாற வேலைய பார்த்து காலந்தோறும் கஞ்சி ஊத்தி காப்பாத்துறேன். திண்ணைல ஓரமா இருந்துக்கலாம். பண்ணைல வேல இருந்தா பகல்ல பாதியும் ராத்திரிக்கு பாதியும் பங்கு போட்டு செஞ்சிடலாம். வேல செஞ்ச காசுக்கு கொசவன் சட்டி வாங்கி கம்பு சோளம் தீட்டி கூட்டு கொளம்பு வெச்சு கூட்டாவே சாப்பிடலாம். கெழக்கால கோழி பண்ண ஓரத்துல ஒத்த தாவரம் இருக்கு. குளுராம இருக்க இரட்டகாடி ஓடு போட்டு இருக்கு.. நாம மூனுபேரும் படுத்துக்கலாம்... அப்பிச்சி ஒன்னும் சொல்ல மாட்டாரு... அம்மாயியும் கூடவந்து படுத்துக்கும்...என்ன பண்ணையத்துல வெச்சிடு... அக்காவும் நீயும் காட்டு வேல செஞ்சுடு.. மொத்த கூலியும் சேர்த்தா மெத்தவாங்கி போட்டுக்கலாம்னு சொன்னேன்... காலங்காத்தல கருக்கல்ல எழுந்தா மால மசங்கக்குள்ள எல்லா வேலயும் முடிச்சிடலாம்.நாம ஏன் காவேரில சாகனும்னு கேட்டேன்.
பொழைக்காம போயி பொறந்தவன் வீட்டுல பொடக்காலில இருந்தாலும் பொறந்தவனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க... இக்கத்த வுட்டு இறங்கல பெத்த புள்ள வெக்கத்த வுட்டு சொல்லுது... சோறு போட நானிருக்கேன்னு. சாவு மட்டுமே தீர்வு அல்ல... சண்ட போட்டாவது புருசனோட பொழப்ப பொழச்சி தீக்கனும்னு பொட்டபுள்ளய பொற முதுகுல தூளி கட்டி இடுப்பு சேலய இருக்கி கட்டி இக்கத்துல பையன இருக்கி புடிச்சு எங்கம்மா நடந்தா வீட்ட நோக்கி...
நாப்பது வருசம் பொழச்சி புட்டு சண்டாளிக்கு, இக்கத்துலயும் பையனில்ல... பக்கத்துலயும் புள்ள இல்ல... புருசனையும் வூட்டுல உட்டுபுட்டு புள்ளய காப்பாத்த எல்லய தாண்டி சந்தக்கி போனா.. காயி கசுரு வித்த காசு எடபோட்ட இராசிகல்லு வூடு வந்து சேர்ந்துச்சு..தாயி உசுரு செத்து போச்சு..பொணம் மட்டும் போச்சு ரெண்டு நாளு பிணவறைக்கு.. மூனா நாளு காலைல எல்லு தண்ணி எறைச்சி இறக்கிட்டேன் குழில. சாவு மட்டுமே சோர்வாச்சு எனக்கு.
பக்கத்துல வந்து எம்புள்ள கேட்குறான் இக்கத்துல என்ன தூக்குன்னு. பிள்ள சொல்லும் முன்னாடி நான் கேட்டேன் எனக்கு சோறு போடுவியானு... கட்டி புடுச்சி சொன்னான் அப்பா எனக்கு பசிக்குதுனு... சொல்ல ஒன்னும் இல்ல... மூக்கு பொடச்சி கண்ணு கலங்கி வாயி கொலர நானும் சொன்னேன்... ஆராரோ... ஆரிரரோ... மாம அடிச்சாரோ மல்லீப்பூ செண்டால... அத்த அடிச்சாளோ அரளிப்பூ செண்டால...ஆராரோ ஆரிரரோ....
No comments:
Post a Comment