Saturday, August 1, 2009

அன்புள்ள அம்மா


அன்புள்ள அம்மா ,

அன்புக்கு இலக்கணமாய் இருப்பவள் நீ.

என் இதயத்தை உருவாக்கிய உன் கருப்பைக்கு

முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

தெய்வங்கள் கோவிலின் கருவறையில்தான் அம்மா இருக்கிறது.

நானும் கடவுள் தானம்மா !!!.

என்னையும் உன் கருவறையில் பத்து மாதம் வைத்திருந்ததை அறிவேன்.

உன் கருவறையில் தானம்மா எனக்கு இதயமே கிடைத்தது .

பூமியில் நான் வாழ என் உடலுக்கு உயிர் கொடுத்தாய்.

எனக்கு உணவளித்து உன் பசியை மறந்தாய்.

நான் தூங்க தமிழை தாலாட்டு ஆக்கினாய்.

உன் சுண்டு விரலில் என் ஐந்து விரல் பற்றி நடை பழக்கினாய்.

கல்வி கற்றது நான், கண் விழித்தது நீ.

நான் புதிதாக வேலையில் அமர்ந்த போது

புது பிறவி எடுத்தது நீதான் அன்னையே !!!.

நான் மணமுடிக்கும் போது நீ பெற்ற உன் உயிருக்கு

துணை கிடைத்தது எண்ணி மகிழ்ந்தது நீதான் தாயே !!!.

என் குழந்தையை பார்த்து உன் அன்னைக்கு நன்றி சொன்னாய்.

உன்னை பற்றி நான் எழுதும் போது என் எழுதுகோல் கூட தலை வணங்கியது.

நான் பிறந்த நாள் விழா கொண்டாடும் போது நான் குடியிருந்த கோவிலுக்கு

கும்பாபிசேகம் நடப்பதாய் தான் உணர்கிறேன்.

முற்பிறவியில் செய்த நற்பலனால் நான் உன்னிடத்தே பிறந்தேன்.

எப்பிறவியில் இக்கடனை தீர்பேனோ ?…

உன்னிடம் தினமும் பேசும் போது சொல்ல துடித்த என் எண்ண அலைகளை

இந்த கடிதத்தில் பதிவு செய்கிறேன்.

வார்த்தைகளை தேடி அலைகிறேன்.

எந்த மொழியிலும் வார்த்தைகள் போத வில்லை தாயே!!!.

நானும் உடன் வருவேன் என்று தெரிந்த நீ

செல்லும் போது முகவரி தர மறந்து விட்டாய்.

என் கடிதங்களை மின் அஞ்சலோ இந்திய அஞ்சலோ

உன்னிடம் சேர்க்காது அம்மா !!!.

நீ கொடுத்திருந்தால் சொர்கத்தின் முகவரியை

என் பிள்ளைக்கு நானும் கொடுத்திருப்பேன் .

கதறுகிறான் என் பிள்ளை முகவரி கேட்டு

உன்னை மறந்த என் பிணத்தின் மீது !!!


இப்படிக்கு,

பழ. இராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment